Enter your Email Address to subscribe to our newsletters

குடியாத்தம், 13 ஜூன் (ஹி.ச.)
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே கொண்டசமுத்திரத்தில் அமைந்துள்ள கைத்தறி பூங்காவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் விஜய் பாலாஜி இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பாரம்பரிய நெசவுத் தொழிலை பாதுகாக்கவும், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் மாநில அரசு எடுத்துவரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு அமைந்தது.
ஆய்வின்போது பூங்காவில் செயல்படும் தறிக்கூடங்கள், சாயப்பட்டறைகள், மூலப்பொருள் கிடங்குகள் மற்றும் நெசவாளர்களுக்கான அடிப்படை வசதிகளை அமைச்சர் பார்வையிட்டார்.
குடிநீர், கழிப்பறை, மின்சாரம், காற்றோட்டம் உள்ளிட்ட வசதிகள் குறித்து நெசவாளர்களிடம் நேரடியாக கேட்டறிந்தார். மேலும், உற்பத்தியாகும் புடவைகளின் தரம், சந்தைப்படுத்தும் முறைகள் மற்றும் நெசவாளர்களுக்கு கிடைக்கும் கூலி குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தினார்.
நெசவாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜய் பாலாஜி,
கைத்தறி நெசவு என்பது தமிழரின் பண்பாட்டு அடையாளம். இதை நம்பி வாழும் லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே அரசின் தலையாய கடமை என்று தெரிவித்தார்.
கைத்தறி நெசவுக்கான கூலியில் நிலவும் பாகுபாடுகளை களைந்து, அனைவருக்கும் சீரான மற்றும் நியாயமான ஊதியம் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
அதேசமயம், கைத்தறி என்ற பெயரில் போலியாக சங்கங்களை நடத்தி அரசின் சலுகைகளை முறைகேடாக பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என்றும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.
உண்மையான நெசவாளர்களுக்கு செல்ல வேண்டிய பயன்கள் தடையின்றி சென்றடைய, போலி சங்கங்கள் கணக்கெடுக்கப்பட்டு களையெடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர், கைத்தறித்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் நெசவாளர் சங்க பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
அமைச்சரின் இந்த திடீர் வருகையும், அளித்த உறுதிமொழிகளும் கொண்டசமுத்திரம் பகுதி நெசவாளர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b