Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை , 13 ஜூன் (ஹி.ச.)
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியாக விளங்கும் மும்பை Dharavi பகுதியில் செயல்படுத்தப்படும் மறுசீரமைப்பு திட்டத்திற்காக அப்பகுதி மக்களை தற்காலிகமாக வேறு பகுதிகளில் குடியமர்த்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
சுமார் 2.39 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள தாராவியில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.
இங்கு வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிர அரசு சார்பில் அரசு–தனியார் கூட்டாண்மையில் இந்த மறுசீரமைப்பு திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
திட்டத்தை செயல்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட கூட்டுத் நிறுவனத்தில் Adani Group 80 சதவீத பங்கையும், மாநில குடிசை மறுவாழ்வு ஆணையம் 20 சதவீத பங்கையும் கொண்டுள்ளது.
திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.95,790 கோடி ஆகும்.
முதல் கட்டமாக செக்டர் 6, சாகுநகர் பகுதிகளில் வசிக்கும் சுமார் 900 குடும்பங்களை மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட குடியிருப்புகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்ததாவது:
தாராவியில் இருந்து இடம்பெயரும் குடும்பங்களுக்கு ரூ.15,000 ஆரம்ப உதவித் தொகை வழங்கப்படுகிறது. மேலும் மாதந்தோறும் ரூ.22,000 முதல் ரூ.30,000 வரை வாடகை உதவித் தொகை வழங்கப்படும். புதிய வீடுகள் ஒப்படைக்கப்படும் வரை இந்த உதவி தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 350 சதுர அடி பரப்பளவில் நவீன வீடுகள் வழங்கப்பட உள்ளன. மேலும் 2028 ஆம் ஆண்டுக்குள் 10,000 வீடுகள் கட்டி வழங்கவும், 2032 ஜனவரிக்குள் முழுத் திட்ட பணிகளையும் நிறைவு செய்யவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகளுடன் பள்ளிகள், மருத்துவமனைகள், பூங்காக்கள், குழந்தைகள் நல மையங்கள், சமுதாயக் கூடங்கள், வணிக வளாகங்கள் மற்றும் தொழிற்பூங்கா உள்ளிட்ட வசதிகளும் அமைக்கப்பட உள்ளன.
தாராவி முழுமையான நகர்ப்புற வடிவமைப்புடன் புதிய நகரமாக மாற்றப்படும் நிலையில், குடியிருப்பாளர்கள் இடமாற்றப் பணி தற்போது தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA