Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 ஜூன் (ஹி.ச.)
சேலத்தில் தவெக நிர்வாகி கடன் வாங்கித் தருவதாகக் கூறி 50-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டிற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,
பெண்களை வேட்டையாடும் காமுகர்களின் கூடாரமான தவெக!
சேலம் நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த தவெகவின் ஒன்றிய நிர்வாகியான மணிகண்டன் என்பவர், கடன் வாங்கித் தருவதாகக் கூறி 50-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி தனது நண்பர்களின் இச்சைக்கும் பலியாக்கியதாக வெளியாகியுள்ள செய்தி தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
பெண்களை இப்படி வெறும் சதைப் பிண்டங்களாக மட்டுமே பாவிக்கும் மனித மிருகங்களுக்கு கட்சியில் பொறுப்பு வழங்கி பாதுகாத்துக் கொண்டிருக்கும் திரு.
விஜய் அவர்கள், தமிழகப் பெண்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வார்? வெளியில் உள்ள குற்றவாளிகளிடம் இருந்து பெண்களைக் காக்க சிங்கப்பெண் சிறப்புப் படை அமைத்துள்ளதாக விளம்பரம் தேடும் முதல்வர், தனது கட்சி நிர்வாகிகளிடம் இருந்து பெண்களை பாதுகாக்க என்ன படை அமைக்கப் போகிறார்?
“மாற்று அரசியல்” என்று முழங்கிய தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பாலியல் குற்றங்களும், பெரும்பாலான குற்றங்களின் பின்னணியில் தவெகவினரின் முகங்களும் தினசரி செய்தித்தாள்களை நிறைத்து வருவதைப் பார்க்கையில், கடந்த தீயசக்தியின் நீட்சி தான் தற்போதைய துரோக சக்தி என்பது உறுதியாகிறது.
“தவெகக்காரன்” என்பது குற்றம் செய்வதற்கான அடையாள அட்டையாகவே மாறி வருவது கண்டிக்கத்தக்கது மட்டுமன்றி, ஆபத்தானதும் கூட. இப்படிப்பட்டவர்களை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், வரும் காலத்தில் தமிழகம் மிகப்பெரிய தலைகுனிவை சந்திக்க நேரிடும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b