தேர்வுத் தாள் கசிவு, வேலைவாய்ப்பின்மைக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் - ராகுல் காந்தி அறிவிப்பு
புதுடெல்லி, 13 ஜூன் (ஹி.ச.) தேர்வுத் தாள் கசிவுகள், தேர்வு முறைகேடுகள், வேலைவாய்ப்பின்மை மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக நாடு தழுவிய முதல் கட்ட பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அகில இந
ராகுல்


புதுடெல்லி, 13 ஜூன் (ஹி.ச.)

தேர்வுத் தாள் கசிவுகள், தேர்வு முறைகேடுகள், வேலைவாய்ப்பின்மை மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக நாடு தழுவிய முதல் கட்ட பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் வழிகாட்டுதலிலும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் தலைமையிலும் இந்த இயக்கம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, ராகுல் காந்தி ஜூன் 17-ஆம் தேதி கோட்டாவில் தொடங்கி, ஜூலை 10-ஆம் தேதி அலகாபாத், ஜூலை 11-ஆம் தேதி பாட்னா மற்றும் ஜூலை 14-ஆம் தேதி டெல்லியில் மாணவர் மாநாடுகளை நடத்த உள்ளார். இதில் மாணவர்கள், போட்டித் தேர்வு எழுதும் இளைஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் தேர்வு முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் பங்கேற்க உள்ளனர்.

தேர்வுத் தாள் கசிவுகள், அதிகரித்து வரும் தேர்வுக் கட்டணங்கள் மற்றும் வெளிப்படையான தேர்வு, ஆட்சேர்ப்பு முறையை உறுதி செய்ய அரசின் தோல்வி ஆகியவற்றால் கோடிக்கணக்கான இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், தேசிய மாணவர் சங்கம் (NSUI), இளைஞர் காங்கிரஸ் மற்றும் மாநில, மாவட்ட காங்கிரஸ் அமைப்புகள் மூலம் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி மையங்கள் உள்ளிட்ட இடங்களில் மாணவர்களை நேரடியாக சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

நீட் தேர்வை மையமயமாக்கலைக் குறைத்து மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்குதல், தேர்வுக் கட்டணங்களை ரத்து செய்தல், தேர்வுத் தாள் கசிவில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்குதல் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் இந்த இயக்கம் வலியுறுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தவும், அவர்களின் உரிமைகள் மற்றும் எதிர்காலத்தை பாதுகாக்க தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் காங்கிரஸ் வலியுறுத்தும் என கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P