Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 13 ஜூன் (ஹி.ச.)
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து, தற்போது வினாடிக்கு 700 கன அடியாக நீடித்து வருகிறது.
தமிழக காவிரி கரையோர பகுதிகளில் போதிய மழை பெய்யாத நிலையில், காவிரி ஆற்றின் நீர்வரத்து பெருமளவில் கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரை மட்டுமே சார்ந்துள்ளது.
தற்போது கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால், தமிழக எல்லைக்குள் உள்ள காவிரி ஆற்றின் சில பகுதிகள் வறண்டு காணப்படுகின்றன.
இதன் எதிரொலியாக, நேற்று வரை வினாடிக்கு 1,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை முதல் குறைந்து, வினாடிக்கு 700 கன அடியாக பதிவாகியுள்ளது.
இருப்பினும், தற்போது வந்து கொண்டிருக்கும் இந்த நீர்வரத்து காரணமாக தர்மபுரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லில் உள்ள சினி ஃபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் அருவிகளின் அழகை கண்டு ரசித்து வருகின்றனர்.
கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைப் பொறுத்தே அடுத்தடுத்த நாட்களில் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து நிலவரம் அமையும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam