ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன -எல்.முருகன் தகவல்
புதுச்சேரி, 13 ஜூன் (ஹி.ச.) புதுச்சேரியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து 4,402 நாட்களை கடந
எல் முருகன்


புதுச்சேரி, 13 ஜூன் (ஹி.ச.)

புதுச்சேரியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து 4,402 நாட்களை கடந்துள்ளதாகவும், உலகிற்கு வழிகாட்டும் தலைவராக திகழும் மோடி பிரதமராக 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த 12 ஆண்டுகளில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று வளர்ச்சிப் பாதையில் பாஜக அரசு செயல்பட்டு வருவதாக கூறிய அவர், இந்தியாவில் 25 கோடி மக்கள் வறுமைக் கோட்டிலிருந்து மீண்டுள்ளதாகவும், 12 கோடிக்கும் மேற்பட்ட கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும், 5 லட்சம் கிராமங்களில் திறந்தவெளி கழிப்பிடப் பயன்பாடு ஒழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், 58 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு ஜன் தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் உள்கட்டமைப்பு முதலீடு 2 லட்சம் கோடியில் இருந்து 12.2 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும் கூறினார்.

தற்போது 166 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாகவும், உலகிலேயே அதிக டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் நடைபெறும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தேசிய டயாலிசிஸ் திட்டத்தின் மூலம் 4 கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளதாகவும், தேசிய பாதுகாப்பில் எந்த சமரசமும் இன்றி இந்தியா செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜல்லிக்கட்டு தடையை நீக்கியது, காசி தமிழ் சங்கமம் ஏற்படுத்தியது மற்றும் தமிழர்களின் பழமையான கலைப் பொருட்களை மீட்டுக் கொண்டுவந்தது போன்ற நடவடிக்கைகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.

புதுச்சேரியில் இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி சிக்னல் பகுதிகளில் மேம்பாலம் அமைக்க ரூ.438 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஏழைகள், விவசாயிகள் மற்றும் பெண்களின் நலனுக்காக மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறினார்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து பேசிய எல்.முருகன், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் செலவுகள் மற்றும் பணியாளர்கள் பயன்பாடு குறையும் என்பதால், அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

மேகதாது அணை தொடர்பாக பேசிய அவர், இரு மாநிலங்களின் நலனும் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P