Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 13 ஜூன் (ஹி.ச.)
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.
இங்கு வரும் பக்தர்களுக்குக் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசித்தி பெற்ற பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
மேலும், பழனி கோவில் நிர்வாகத்தால் அதிகாரப்பூர்வ விற்பனை நிலையங்கள் மூலம் அரை கிலோ பஞ்சாமிர்த டப்பாக்கள் 40 ரூபாய் மற்றும் 50 ரூபாய்க்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பழனி கோவில் பஞ்சாமிர்தத்தை சிலர் பதுக்கி, தனியார் ஆன்லைன் விற்பனை தளங்களில்
(Online Shopping Sites) பல மடங்கு கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வதாகக் கோவில் நிர்வாகத்திற்குப் புகார்கள் வந்தன.
இது குறித்துப் பழனி கோவில் நிர்வாகம் சார்பில் அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் போலீஸார் சைபர் க்ரைம் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், பழனியைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் நாகராஜ் (35) மற்றும் அவரது மனைவி சிந்து (35) ஆகிய இருவரும் கூட்டுச் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது.
இவர்கள் கோவில் கவுண்டர்களில் 40, 50 ரூபாய்க்கு விற்கப்படும் அசல் தேவஸ்தான பஞ்சாமிர்தத்தை ஆன்லைனில் 249 ரூபாய்க்கு (பல மடங்கு கூடுதல் விலை) விற்றுப் பக்தர்களை ஏமாற்றி, கறுப்புச் சந்தையில் கொள்ளை லாபம் சம்பாதித்து வந்தது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மோசடியில் ஈடுபட்ட கணவன், மனைவி இருவரையும் உடனடியாகக் கைது செய்த அடிவாரம் போலீஸார், அவர்கள் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN