Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 13 ஜூன் (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம் மாறமலை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் வேலை பார்த்து வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த ரவி (வயது 47) என்பவர் இன்று காலை வழக்கம்போல் தோட்ட வேலைக்குச் சென்றுள்ளார்.
ரவி, வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, உணவு தேடி வந்த ஒற்றை காட்டு யானை எதிர்பாராத விதமாக அவரை தாக்கியது.
யானையின் தாக்குதலில் தலை, நெஞ்சு மற்றும் கால்களில் பலத்த காயமடைந்த ரவியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் வேலை செய்து கொண்டிருந்த சக தொழிலாளர்கள் ஓடிவந்தனர்.
அவர்கள் திரண்டு வந்து சத்தமிட்டதால் யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.
படுகாயமடைந்த ரவியை சக தொழிலாளர்கள் மீட்டு உடனடியாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் தற்போது அவரது உடல்நிலை குறித்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மாறமலை பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், வன எல்லையோர கிராம மக்களும், தோட்டத் தொழிலாளர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து வனவிலங்கு-மனித மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b