கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய கைதி சேலத்தில் சிக்கினார் - தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை
கோவை, 13 ஜூன் (ஹி.ச.) ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் பிம்முடு அஜித் குமார். இவர் கார் விற்பனை செய்பவர்களின் தகவலை பெற்று , அதை OLX செயலியில் தனது கார் என்பதை போல பதிவேற்றம் செய்து பல லட்சம் மதிப்புடைய காருக்கு ஒரு சில லட்சங்கள் மட்டும் அட்வான்ஸ
க


கோவை, 13 ஜூன் (ஹி.ச.)

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் பிம்முடு அஜித் குமார்.

இவர் கார் விற்பனை செய்பவர்களின் தகவலை பெற்று , அதை OLX செயலியில் தனது கார் என்பதை போல பதிவேற்றம் செய்து பல லட்சம் மதிப்புடைய காருக்கு ஒரு சில லட்சங்கள் மட்டும் அட்வான்ஸாக பெற்றுக் கொண்டு மோசடி செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இவர் மீது ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 30 க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் உள்ளது.

ஆந்திராவில் கைது செய்யப்பட்ட இவர் உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து தப்பினார்.

ஆந்திராவில் இருந்து தப்பிய அவர் , திருப்பூர் மாவட்டத்தில் இதேபோல கார் விற்பனை செய்வது போல இருவரிடம் பணம் பெற்று மோசடி செய்து உள்ளார்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் பிம்முடு அஜித் குமாரை திருப்பூர் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவர் கோவை மத்திய சிறையில் கடந்த வாரம் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு மற்றும் வலது காலில் வீக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகளுக்கான 'எம்எம்-1' சிறப்பு வார்டில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டார்.

இந்த வார்டில் இவருடன் சேர்த்து மொத்தம் மூன்று கைதிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், துப்பாக்கி ஏந்திய போலீஸார் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று இரவு சுமார் 7.45 மணியளவில், கைதி அஜித்குமார் தான் அவசரமாக கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்று பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களிடம் கூறியுள்ளார்.

காவலர்களும் அவரை கழிவறைக்கு அழைத்துச் சென்று, கதவை சாத்திவிட்டு வெளியே பாதுகாப்புக்கு நின்றுள்ளனர்.

ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த காவலர்கள், கழிப்பறை கதவைத் தட்டியுள்ளனர்.

உள்ளே இருந்து எவ்வித பதிலும் வராததால் அதிர்ச்சியடைந்து கதவைத் திறந்து பார்த்தபோது, அஜித்குமார் அங்கு இல்லாததைக் கண்டு உறைந்து போயினர்.

போலீஸார் உள்ளே சென்று பார்த்த போது தான் கைதியின் திட்டம் தெரியவந்தது.

அவர் கழிவறைக்குள் சென்றவுடன், அங்கிருந்து பெண்கள் கழிவறைக்குச் செல்லும் பாதையை மறைப்பதற்காக இருந்த ஒரு தடுப்பு கதவை பலவந்தமாக உடைத்துள்ளார்.

பின்னர், அந்த ரகசிய வழியாக நுழைந்து, அருகில் உள்ள 'எஃப்எம்-1' பெண்கள் வார்டு வழியாக மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியேறி தப்பியோடியுள்ளார்.

தப்பிய கைதியை பிடிக்க கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தனிப்படையினர், செல்போன் சிக்னல் மற்றும் உளவுத் தகவலின் அடிப்படையில் அஜித்குமார் சேலத்தில் பதுங்கி இருப்பதை கண்டறிந்தனர்.

இதனையடுத்து சேலம் விரைந்த தனிப்படையினர், அவரை இன்று காலை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பிம்முடு அஜித்குமாரிடம் தப்பியது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விசாரணைக்குப் பின் அவர் மீண்டும் கோவை அழைத்துச் செல்லப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களிடமும் துறை ரீதியான விசாரணை நடத்த காவல்துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b