Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 13 ஜூன் (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டத்தின் மலைக்கிராமங்களில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் கனமழை, ரப்பர் பால் வெட்டும் பணிகளை முற்றிலுமாக முடக்கியுள்ளது.
இடைவிடாத மழை காரணமாக அரசு மற்றும் தனியார் ரப்பர் தோட்டங்களில் தினசரி நடைபெறும் பால் வெட்டும் பணிகள் தடைபட்டு, தோட்டங்கள் முழுவதும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
குறிப்பாக வாழையத்து வயல், கீரிப்பாறை உள்ளிட்ட மலையோரப் பகுதிகளில் நிலைமை மோசமாக உள்ளது. விடியற்காலை நேரங்களில் மேற்கொள்ளப்படும் பால் வெட்டும் பணி, மழைநீர் மரப்பட்டைகளில் வழிவதால் சாத்தியமற்றதாகி விடுகிறது.
ஈரமான பட்டையில் வெட்டினால் பால் நீருடன் கலந்து தரம் குறைவதோடு, மரங்களுக்குப் பூஞ்சை நோய் தாக்கும் அபாயமும் உள்ளதால் தொழிலாளர்கள் பணிக்குச் செல்வதைத் தவிர்த்து வருகின்றனர்.
தினக்கூலியை மட்டுமே நம்பியுள்ள நூற்றுக்கணக்கான ரப்பர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்யும் மழையால் ஒரு வாரத்திற்கும் மேலாக வேலையின்றி தவிப்பதாகத் தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மழைக்காலங்களில் மாற்று வேலைவாய்ப்பின்றி குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் திணறுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
ரப்பர் வாரிய அதிகாரிகள் மழை நிலவரத்தைக் கண்காணித்து வருவதாகவும், மழை ஓய்ந்த பின்னரே பால் வெட்டும் பணிகள் மீண்டும் தொடங்கும் என்றும் தோட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, வானிலை ஆய்வு மையம் அடுத்த இரு நாட்களுக்கு மலைப்பகுதிகளில் கனமழை தொடரும் என எச்சரித்துள்ளதால் தொழிலாளர்கள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b