ரூ.2,500 பணத் தகராறில் தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் கொலை - இருவர் கைது
கள்ளக்குறிச்சி, 13 ஜூன் (ஹி.ச) கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் பொய்குணம் செல்லும் சாலையில் வசித்து வந்த அலமேலு, அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த மாதம் 23-ஆம் தேதி அவர்
Sankarapuram Police Station


கள்ளக்குறிச்சி, 13 ஜூன் (ஹி.ச)

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் பொய்குணம் செல்லும் சாலையில் வசித்து வந்த அலமேலு, அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த மாதம் 23-ஆம் தேதி அவர் திடீரென மாயமான நிலையில், அவரது கணவர் பாஸ்கர் சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பல்வேறு இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ராஜப்பா மற்றும் அலமேலு குடும்பங்களுக்கு இடையே நீண்டகாலமாக பணம் தொடர்பான பிரச்சினை இருந்து வந்ததாக தெரியவந்துள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ராஜப்பாவின் வீட்டில் அலமேலு வாடகைக்கு வசித்து வந்ததாகவும், அப்போது ரூ.2,500 கடன் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அந்த பணத்தை திருப்பித் தராதது தொடர்பாக அலமேலு தொடர்ந்து கேட்டுவந்ததாகவும், சம்பவத்தன்று பணத்தை வாங்கித் தருவதாக கூறி ராஜப்பா அவரை கல்வராயன் மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அங்கு சென்றபோது பணம் வழங்கப்படவில்லை என கூறி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அது முற்றி தகராறாக மாறியதாகவும் கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த ராஜப்பா அருகில் கிடந்த கல்லால் தாக்கியதில் அலமேலு உயிரிழந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதையடுத்து, உடலை யாருக்கும் தெரியாமல் சாக்கு மூட்டையில் கட்டி, கல்வராயன் மலைப்பகுதியில் சுமார் 60 அடி ஆழமுள்ள பள்ளத்தில் வீசியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அலமேலு மாயமானது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு, சிசிடிவி காட்சிகளை சேகரித்து வந்தது ராஜப்பாவுக்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனஅழுத்தத்தில் இருந்த அவர், இறுதியில் காவல் நிலையத்தில் சரணடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், இந்த வழக்கில் ராஜப்பாவின் மனைவி சுகன்யா மற்றும் அவரது அண்டை வீட்டைச் சேர்ந்த பாண்டுரங்கன் ஆகியோருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணையை விரிவுபடுத்தினர்.

அதன் தொடர்ச்சியாக, சுகன்யா மற்றும் பாண்டுரங்கன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN