Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 13 ஜூன் (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பைச் சேர்ந்த பழனி என்பவர், சிவகாசி பேருந்து நிலையத்தில் பொது இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், சிவகாசி பேருந்து நிலையத்தில் தனிநபர்கள் பொது இடங்களை ஆக்கிரமித்து டீக்கடை மற்றும் உணவகம் நடத்தி வருவதாகவும், மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தை குத்தகைக்கு எடுத்த நபர் விதிமுறைகளை மீறி கூடுதல் இடங்களை ஆக்கிரமித்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இதனால் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுவதோடு, போக்குவரத்து நெரிசலும் அதிகரிப்பதாக மனுதாரர் தெரிவித்திருந்தார்.
மேலும், பேருந்து நிலைய வளாகத்தில் இருந்த சுவரை இடித்து கூடுதல் கதவுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பயணிகள் வசதிக்காக இருக்கைகள் அமைக்க வேண்டிய இடங்களில் தனிநபர் பயன்பாடு நடைபெறுவதாகவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, பேருந்து நிலைய வளாகத்தில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலான ஆக்கிரமிப்புகள் சட்டவிரோதமானவை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு பதிலளித்த மாநகராட்சி தரப்பு, புகார் தொடர்பாக விசாரணை நடத்தி, ஆக்கிரமிப்புகள் உறுதியானால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தது.
இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், சிவகாசி மாநகராட்சி ஆணையர் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், சட்டவிரோத கட்டுமானங்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அவற்றை இரண்டு மாதங்களுக்குள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
பின்னர் வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam