திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு - இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருப்பு
திருப்பதி, 13 ஜூன் (ஹி.ச.) ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை நிறைவு மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால், இலவச தரிசன டோக்கன் மற்றும் ரூ.300 சிறப்பு தரிசன
திருப்பதி


திருப்பதி, 13 ஜூன் (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை நிறைவு மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது.

இதனால், இலவச தரிசன டோக்கன் மற்றும் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் இல்லாமல் நேரடி இலவச தரிசனத்திற்காக வந்துள்ள பக்தர்கள் சுமார் 4 கிலோமீட்டர் நீள வரிசையில் காத்திருக்கின்றனர்.

தற்போதைய நிலவரப்படி, இலவச தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட பக்தர்கள் சுமார் 24 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், உணவு மற்றும் பிற அடிப்படை வசதிகளை தேவஸ்தான நிர்வாகம் செய்து வருகிறது.

அதேநேரத்தில், ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ள பக்தர்கள் சுமார் 4 மணி நேரமும், இலவச தரிசன டோக்கன் பெற்றுள்ள பக்தர்கள் சுமார் 6 மணி நேரமும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நேற்று மட்டும் திருமலையில் ஏழுமலையானை 74,636 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். அவர்களில் 43,084 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றியுள்ளனர்.

மேலும், பக்தர்கள் நேற்று செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.4 கோடியே 64 லட்சமாக பதிவாகியுள்ளது. திருமலையில் தொடர்ந்து அதிகரித்து வரும் பக்தர்கள் வருகையால் தரிசன நேரமும் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P