Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 ஜூன் (ஹி.ச.)
சென்னை மாநகரில் குடிநீர் குழாய் இணைப்புப் பணிகள் காரணமாக இன்று முதல் நாளை வரை மூன்று மண்டலங்களுக்கு உட்பட்ட பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
இன்று காலை 10 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி வரை மண்டலம் 6, மண்டலம் 7 மற்றும் மண்டலம் 8 ஆகிய பகுதிகளில் குடிநீர் வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாநகர் மண்டலத்தில் பாடி மேம்பாலம் அருகே மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய குடிநீர் குழாய் இணைக்கும் பணிகளே இந்த தடைக்கு காரணம் என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதனால் மண்டலம் 6-க்கு உட்பட்ட கொளத்தூர், ஜவகர் நகர், செம்பியம், அயனாவரம் மற்றும் பெரம்பூர் ஆகிய பகுதிகளில் இன்று குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்படுகிறது.
அதேபோல மண்டலம் 7-ல் கொரட்டூர் பகுதியிலும், மண்டலம் 8-ல் வில்லிவாக்கம் மற்றும் அண்ணாநகர் மேற்கு பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் இருக்காது.
திடீர் அறிவிப்பால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இரண்டு நாட்களுக்கு தேவையான குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறும், அவசர தேவைக்கு குடிநீர் வாரியத்தின் லாரிகள் மூலம் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், புகார்களுக்கு 044-4567 4567 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணிகள் திட்டமிட்டபடி நிறைவடைந்து, நாளை காலை 10 மணிக்கு பிறகு வழக்கம்போல் குடிநீர் விநியோகம் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b