Enter your Email Address to subscribe to our newsletters

மேட்டூர், 13 ஜூன் (ஹி.ச.)
சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியில் காவிரி ஆற்றில் ரசாயனக் கழிவுகள் கலந்ததால் தண்ணீர் பச்சை நிறமாக மாறி கடும் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் நீர், செக்கானூர் கதவணை மின் நிலையம் வரை 0.50 டி.எம்.சி. அளவுக்கு தேக்கி வைக்கப்பட்டு, அதன் மூலம் 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் சேலம் மாநகராட்சி, வேலூர், காடையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு நீரேற்று நிலையங்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக காவிரி ஆற்றின் இந்தப் பகுதியில் நீர் பச்சை நிறமாக மாறி காணப்படுவதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் கரையோர மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அந்த நீரை குடிப்பதற்கும், கால்நடைகளுக்கு பயன்படுத்துவதற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
மேலும், காவிரி நீரில் குளிக்கும் பொதுமக்களுக்கு அலர்ஜி உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதாகவும், நீரேற்று நிலையங்கள் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரிலும் துர்நாற்றம் வீசுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக தண்ணீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வு மேற்கொண்டு, ஆற்றில் தேங்கி காணப்படும் கழிவுகளை அகற்றி, பொதுமக்களின் உடல்நலம் மற்றும் குடிநீர் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P