Enter your Email Address to subscribe to our newsletters

தௌசா, 14 ஜூன் (ஹி.ச)
ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் ஆக்ரா பைபாஸ் சாலையில் இன்று அதிகாலை உத்தரப் பிரதேச அரசுப் பேருந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 20 பேர் காயமடைந்தனர்.
அலிகாரிலிருந்து ஜெய்ப்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து விபத்தில் சிக்கியது.
அதிகாலை சுமார் 4:30 மணியளவில் பெரும்பாலான பயணிகள் உறங்கிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பேருந்து லாரியின் பின்புறம் பலமாக மோதியதில் பெரும் சத்தம் கேட்டதாகவும், பேருந்தின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்ததாகவும், பல பயணிகள் இருக்கைகளில் இருந்து தூக்கி வீசப்பட்டதாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
காயமடைந்தவர்கள் உள்ளூர் மக்களின் உதவியுடன் உடனடியாக மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் தௌசா மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தலைமைக் காவலர் அனில் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அலிகாரிலிருந்து ஜெய்ப்பூர் சென்று கொண்டிருந்த உ.பி. அரசுப் பேருந்து இது. பைபாஸில் உள்ள திவாரி கட் பகுதியில் பேருந்து டிரெய்லர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.
விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. 20 பேர் காயமடைந்து தற்போது தௌசா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 5 முதல் 6 பேர் பெண்கள். மற்றவர்கள் ஆண்கள். என்றார்.
இது தொடர்பாக மாவட்ட மருத் துவமனையின் இரவுப் பணி தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஆஷிஷ் கூறுகையில்,
அலிகாரிலிருந்து ஜெய்ப்பூர் சென்ற உ.பி. அரசுப் பேருந்து தௌசா பைபாஸில் விபத்துக்குள்ளானது. மொத்தம் 20 பேர் இங்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அனைவரும் சீரான நிலையில் உள்ளனர். லேசான காயங்களுடன் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில், முன்னால் சென்ற லாரியின் தூரத்தை ஓட்டுநர் தவறாகக் கணித்திருக்கலாம் அல்லது அதிவேகமாக இயக்கியிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b