என்.எல்.சி. சுரங்க விரிவாக்கத்திற்காக குலதெய்வக் கோயிலை இடிக்கக் கூடாது - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
கடலூர், 14 ஜூன் (ஹி.ச.) கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே தெற்கு மேலூரில் அமைந்துள்ள அங்காளம்மன்–பாவாடைராயன் கோயிலை, என்.எல்.சி. நிறுவனத்தின் நிலக்கரி சுரங்க விரிவாக்கத் திட்டத்திற்காக இடிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்றும், தமிழக அரசு தலையிட்டு
அன்புமணி


கடலூர், 14 ஜூன் (ஹி.ச.)

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே தெற்கு மேலூரில் அமைந்துள்ள அங்காளம்மன்–பாவாடைராயன் கோயிலை, என்.எல்.சி. நிறுவனத்தின் நிலக்கரி சுரங்க விரிவாக்கத் திட்டத்திற்காக இடிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்றும், தமிழக அரசு தலையிட்டு அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில்,

அங்காளம்மன்–பாவாடைராயன் கோயில்

30-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் குலதெய்வக் கோயிலாக விளங்கி வருவதாகவும், கடலூர் மட்டுமின்றி அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வழிபாட்டு தலமாக திகழ்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கோயிலைச் சுற்றியுள்ள நிலங்களை ஏற்கனவே என்.எல்.சி. நிறுவனம் கையகப்படுத்தியுள்ள நிலையில், தற்போது சுரங்க விரிவாக்கத்திற்காக கோயிலையும் அகற்ற முயற்சிப்பதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அங்காளம்மன்–பாவாடைராயன் கோயில் அதே இடத்தில் தொடர்ந்தாலும் என்.எல்.சி. நிறுவனத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், ஆனால் கோயில் இடிக்கப்பட்டால் லட்சக்கணக்கான மக்களின் இறைநம்பிக்கை பாதிக்கப்படும் என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

எனவே, கோயிலை இடிக்கும் முடிவை என்.எல்.சி. நிர்வாகம் கைவிட வேண்டும் என்றும், தமிழக அரசும் உரிய அழுத்தம் கொடுத்து இந்த முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P