Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஜூன் (ஹி.ச.)
உலக குருதிக்கொடையாளர் நாளான இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குருதிக்கொடையாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
உலக குருதிக்கொடையாளர் நாள் இன்று!
நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடைப் பாசறையில் தங்களை இணைத்துக்கொண்டு, உயிர்காக்கும் அவசரத்தேவை எனும்போதெல்லாம் மறுக்காது, இரவு - பகல் பாராது தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் ஓடோடிச் சென்று தங்கள் குருதியைக் கொடுத்து உயிர் காக்கும் என் அன்பிற்கினிய தம்பி-தங்கைகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சிகர வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். நாம் தமிழர் கட்சி குருதிக்கொடைப் பாசறை கடந்த 16 ஆண்டுகளில் ஏறத்தாழ 4 இலட்சம் அலகுகள் அளவிற்கு குருதியைக் கொடையாக வழங்கி பல்லாயிரக் கணக்கான மக்களின் இன்னுயிரைக் காத்துள்ளது.
கொடையாக நாம் தரும் ஒவ்வொரு துளி குருதியும் உயிர் காக்கும் பேராற்றல் கொண்ட அருமருந்தாகும்! காலத்தினாற் செய்த உதவி ஞாலத்தை விடவும், செய்யாமற் செய்த உதவி வையகத்தையும் - வானகத்தையும் விடவும் பெரிதென்ற நம் வள்ளுவப் பெரும்பாட்டனின் குறளுக்கிணங்க ஒவ்வொரு முறையும் நீங்கள் அளிக்கும் குருதிக்கொடையானது காலத்தினால் செய்த உதவி மட்டுமல்ல; செய்யாமல் செய்த பேருதவியும் கூட!
தன்னலம் சிறிதுமின்றி பிறர் உடல் நலம் பேணவும், பேராபத்தில் உள்ள உயிர் நலம் காக்கவும், தேவை ஏற்படும் போதெல்லாம் குருதியைக் கொடையாக தந்துதவும் குருதிக்கொடையாளர்களின் பெரும்பணி மிகுந்த போற்றுதற்குரியது; வணங்கத்தக்கது! ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவில் அதிக குருதிக்கொடை வழங்கும் அமைப்பிற்கான பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து நம்முடைய பாசறை உறவுகள் பெறும்போதெல்லாம் மிகுந்த பெருமிதமும் மனநிறைவும் கொள்கிறேன்.
தொடரட்டும் உயிர்காக்க குருதிக் கொடை தரும் உங்கள் உன்னதப் பெருந்தொண்டு!
மலரட்டும் இப்பூவுலகம், பொதுநலம் பேணும் உங்கள் மாசற்ற பேரன்புகொண்டு!
“ஒவ்வொரு துளியும் உயிர் காக்கும்,
கொடுப்பவர் உள்ளம் உயர்வாகும்,
உன்னத கொடையாம் குருதிக்கொடை!”
என் பேரன்பிற்குரிய குருதிக்கொடையாளர்கள் அனைவருக்கும் உலக குருதிக்கொடையாளர் நாள் நல்வாழ்த்துகள்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b