Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஜூன் (ஹி.ச.)
தமிழ்நாடு அரசால் சென்னை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் /மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கென 12 அரசு கல்லூரி மாணவர் விடுதி மற்றும் 6 அரசு கல்லூரி மாணவியர் விடுதிகள் ஆக மொத்தம் 18 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ/மாணவியர் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர்.
இந்த விடுதிகளில் தங்கிப் பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிவிப்பின்படி,
இந்த விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் பின்வரும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அனைத்து விடுதி மாணவ/மாணவியருக்கு மூன்று வேளை உணவு மற்றும் தங்கும் வசதியும் அளிக்கப்படும்
விடுதிகளில் சேர்வதற்கான தகுதிகள்
பெற்றோர்/பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ. 2,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ-க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது.
தகுதியுடைய மாணவ/மாணவியர் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிகாப்பாளர்/காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்படோர் அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட விடுதிகாப்பாளர்/காப்பாளினிகள் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் 15.07.2026-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ/மாணவியர்கள் விண்ணப்பிக்கும் பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் ஏதும் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும் போதுமட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள்ஏற்படுத்தப்பட்டுள்ளன.
எனவே கல்லூரி மாணவ/மாணவியர்கள் அரசின் இச்சலுகைகளை பெற்று, பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b