Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஜூன் (ஹி.ச.)
சென்னை ராயபுரம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த ஷீலா மேரியின் நெருங்கிய உறவினரான பிரபு மணி என்பவர் குறைந்த விலையில் தங்கக் காசு வழங்கும் திட்டத்தை முதலீட்டு நிறுவனம் வாயிலாக நடத்தி வந்ததாகவும், அதன் மூலம் பொதுமக்களிடம் சுமார் 20 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
கடந்த 2023-24-ம் ஆண்டு வரை 200-க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்த நிலையில், 2024 இறுதியில் பிரபு மணி திடீரென தனது நிறுவனத்தை மூடிவிட்டார்.
தங்க காசு வியாபாரம் செய்யும் நபர் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறிய அவர், சொத்துகளை விற்று, பணத்தை தருவதாக முதலீட்டார்களிடம் கூறி வந்துள்ளார்.
ஆனால், ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பணத்தை திருப்பித் தரவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் சென்னை அசோக் நகர் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தனர்.
இந்த வழக்கில் பிரபு மணி கடந்த ஜூன் 10 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
விசாரணையின் ஒரு பகுதியாக, இந்த மோசடிக்கு ஆய்வாளர் ஷீலா மேரி உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
முதலீட்டு நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு அவர் மறைமுகமாக உதவியதாகவும், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும் புகார்கள் வலுத்தன.
இதனையடுத்து, காவல்துறை உயர் அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக கருதப்பட்டது.
இதன் அடிப்படையில், துறை ரீதியான நடவடிக்கையாக ஷீலா மேரியை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய இணை ஆணையர் உத்தரவிட்டார்.
மேலும் இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் காவல்துறை முடிவு செய்துள்ளது.
காவல்துறையினர் தங்கள் உறவினர்களின் சட்டவிரோத செயல்களுக்கு துணை போவது கடும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என இந்த சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b