Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 14 ஜூன் (ஹி.ச.)
திருவள்ளூர் அருகே சிறுவானூர் கிராமத்தில் கடந்த 10 நாட்களாக இரவு நேரங்களில் தொடர்ச்சியாக ஏற்பட்ட மின்வெட்டால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் சென்னை–திருப்பதி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவள்ளூர் அடுத்த சிறுவானூர் மற்றும் சிறுவானூர் பண்டிகை பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த 10 நாட்களாக இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வந்ததாகவும், இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், இன்று இரவு மீண்டும் மின்வெட்டு ஏற்பட்டதுடன், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் சென்னை–திருப்பதி நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தாலுகா காவல்துறையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மின்விநியோகக் கோளாறு விரைவில் சரிசெய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் பழுதை சரிசெய்து சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு மின் இணைப்பை மீண்டும் வழங்கினர்.
அதன்பின் காவல்துறையினரின் பேச்சுவார்த்தையை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த திடீர் சாலை மறியல் காரணமாக சென்னை–திருப்பதி நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து ஏற்படும் மின்வெட்டுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam