Enter your Email Address to subscribe to our newsletters

நாகை, 14 ஜூன் (ஹி.ச.)
61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் முடிந்து இன்று நள்ளிரவு முதல் நாகை மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல உள்ள நிலையில், மானிய டீசல் தட்டுப்பாடு காரணமாக மீனவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
விசைப்படகு ஒன்றுக்கு வழக்கமாக வழங்கப்படும் டீசலுக்கு பதிலாக தற்போது 200 லிட்டர் மட்டுமே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஒரு முறை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல 500 முதல் 1,000 லிட்டர் வரை டீசல் தேவைப்படும் நிலையில், வெறும் 200 லிட்டர் டீசலை வைத்து தொழில் மேற்கொள்ள முடியாது என மீனவர்களும் படகு உரிமையாளர்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனால், மீன்பிடித் தடைக்காலம் முடிந்தும் உடனடியாக கடலுக்கு செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், மானிய டீசல் வழங்கும் எரிபொருள் நிலையங்களில் டீசல் பெறுவதற்காக மீனவர்கள் மற்றும் படகு உரிமையாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
எனவே, நாகை மாவட்ட மீனவர்களுக்கு வழக்கம்போல போதிய அளவில் மானிய டீசலை வழங்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டீசல் தட்டுப்பாடு நீடித்தால் மீன்பிடித் தொழிலும், அதனைச் சார்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P