Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 14 ஜூன் (ஹி.ச.)
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் களக்காடு தலையணை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கான தடை 11-வது நாளாகவும் நீடிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் களக்காடு–முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட களக்காடு தலையணை, இயற்கை எழில் மற்றும் குளிர்ச்சியான நீர்வரத்திற்குப் பெயர் பெற்ற சுற்றுலாத் தலமாகும். மூலிகைச் செடிகள் நிறைந்த வனப்பகுதியில் இருந்து வரும் நீரில் குளிப்பதற்காக உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவது வழக்கம்.
இந்நிலையில், நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், தலையணை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, களக்காடு–முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் மற்றும் வன உயிரின காப்பாளர் உத்தரவின்படி, கடந்த ஜூன் 4-ஆம் தேதி முதல் தலையணை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போதுவரை வெள்ளத்தின் வேகம் மற்றும் நீர்மட்டம் குறையாத காரணத்தால், இன்றும் தடையை வனத்துறையினர் நீட்டித்துள்ளனர். வெள்ளம் குறைந்து நிலைமை சீரான பின்னரே சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில், தலையணை பகுதியை சுற்றிப் பார்ப்பதற்கு எந்தவித தடையும் இல்லை என்றும், பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுமே குளிப்பதற்கு தடை அமலில் இருப்பதாகவும் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தர வாய்ப்புள்ள நிலையில், வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க அனுமதி இல்லை என்பதை வனத்துறையினர் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam