Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 14 ஜூன் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மேல் நாரியப்பனூர் கிராமத்தில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமை மிக்க புனித அந்தோணியார் ஆலயத்தின் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜூன் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் திருவிழா ஒன்பது நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா ஜூன் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
தேர்த்திருவிழாவின் போது புனித அந்தோணியாரை தரிசித்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருப்பதால், தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் பங்கேற்றனர்.
திருவிழாவை முன்னிட்டு மேல் நாரியப்பனூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.
பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்
200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தேர்த் திருவிழா பக்தி பரவசத்துடனும், கோலாகலமான சூழலிலும் நடைபெற்றது.
Hindusthan Samachar / GOKILA arumugam