Enter your Email Address to subscribe to our newsletters

கோவில்பட்டி, 14 ஜூன் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சமீபத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜீ அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நிலையில், அவர் இல்லாமல் நடைபெற்ற முதல் ஆலோசனைக் கூட்டமாக இது அமைந்தது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான என்.கே. பெருமாள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கட்சியை விட்டு விலகிச் சென்ற முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜீவை கண்டித்து சில நிர்வாகிகள் பேசினர்.
அப்போது கலை இலக்கியப் பிரிவு நிர்வாகி செல்வம், கட்சியை விட்டு சென்றவர்களைப் பற்றி பேசுவதை விட கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.
இதற்கு சில நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், செல்வத்தின் சட்டையைப் பிடித்து வெளியேற்ற முயற்சி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மூத்த நிர்வாகிகள் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தொடர்ந்து பேசிய மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் பிரியா, விளாத்திகுளம் தொகுதியில் கட்சியினர் சரியாக பணியாற்றவில்லை என்றும், மகளிர் அணிக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
இதற்கும் சில நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார், இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.
மேலும், மகளிர் அணி நிர்வாகி பிரியாவை பாதுகாப்பாக அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P