Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 14 ஜூன் (ஹி.ச.)
மதுரை மாவட்டம் தமுக்கம் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க காந்தி நினைவு அருங்காட்சியகத்தில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, அருங்காட்சியகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு, சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள், அவர் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் அரிய புகைப்படத் தொகுப்புகளை அமைச்சர் பார்வையிட்டார்.
குறிப்பாக, காந்தியடிகள் சுடப்பட்டபோது அணிந்திருந்த இரத்தம் தோய்ந்த ஆடை காட்சிப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் சிறிது நேரம் நின்று அஞ்சலி செலுத்தினார்.
மாணவர்களிடையே காந்திய சிந்தனைகளையும், அகிம்சை மற்றும் உண்மை குறித்த விழிப்புணர்வையும் அதிகரிக்க, பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு கல்விச் சுற்றுலாக்களை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், அருங்காட்சியகத்தின் உட்கட்டமைப்பு வசதிகள், டிஜிட்டல் காட்சியகங்களின் செயல்பாடு மற்றும் பார்வையாளர்களுக்கான வசதிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அருங்காட்சியகத்தை மேம்படுத்துவதற்கான புதிய திட்டங்கள் குறித்தும், வரலாற்றுப் பொருட்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆய்வின்போது மதுரை மாவட்ட ஆட்சியர், அருங்காட்சியகச் செயலாளர் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Hindusthan Samachar / vidya.b