Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஜூன் (ஹி.ச.)
சென்னை செல்ல கோவை விமான நிலையம் வந்திருந்த வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் குறித்து கருத்து கூறுவதற்குப் பதிலாக தனது கட்சியை வளர்க்கும் பணியில் கவனம் செலுத்த வேண்டும் என விமர்சித்தார்.
அறிவாலயத்தில் வேறு கட்சியில் இருந்து வந்த ஒருவருக்காக பெரிய விழா நடத்தப்பட்டதாகக் கூறிய அவர், தமிழக வெற்றிக் கழகத்தில் மக்களே தாமாக வந்து இணைந்து வருவதாக தெரிவித்தார்.
தேர்தலுக்கு முன்பு திமுக மற்றும் அதிமுக கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடிக்க முயன்றது யார் என்பதை ஸ்டாலின் விளக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
முதல்வர் விஜய் பிரதமரை சந்தித்து தமிழ்நாட்டிற்கு தேவையானவற்றைப் பெற்றுள்ளதாகக் கூறிய செங்கோட்டையன், 5,000 மெகாவாட் சோலார் மின்சார உற்பத்திக்கான மத்திய அரசின் மானியத்தைப் பெறத் தவறியதற்கு திமுக பதிலளிக்க வேண்டும் என்றார்.
மாநிலத்திற்கு வரவிருந்த முதலீடுகள் வெளியே செல்லாமல் தடுக்க கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும், தற்போது தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை அதிகரிப்பதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
வருவாய்த் துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், அடுத்த மூன்று மாதங்களில் பல்வேறு மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள் காணப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனையே அதுகுறித்து கேட்க வேண்டும் என கூறினார்.
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் கட்சித் தலைவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றார்.
மேலும், மக்களால் நிராகரிக்கப்பட்ட முதல் முதலமைச்சர் ஸ்டாலின் அதிகமாக பேசாமல் தனது கட்சியை வலுப்படுத்தும் வழியைப் பார்க்க வேண்டும் என கடுமையாக விமர்சித்த செங்கோட்டையன், இளைஞர்கள் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்ற மனநிலைக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ