Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 14 ஜூன் (ஹி.ச.)
சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமையகமான பாலன் இல்லத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
கூட்டத்தில் மறைந்த முதுபெரும் தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு சென்னை மாநகரின் மையப்பகுதியில் மணிமண்டபம் அமைக்க வேண்டும், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும், வேலைவாய்ப்பு உரிமையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தடுக்க வேண்டும், போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும், ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும், கல்வித் தரத்தை உறுதி செய்ய வேண்டும் மற்றும் NEET, CUET, CBSE தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளுக்கு எதிராக கண்டனம் தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநிலச் செயலாளர் பாரதி,
நல்லகண்ணுவின் அரசியல் நேர்மையையும் சமூகப் பணியையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில் தமிழக அரசு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், பாலியல் வன்கொடுமை, போதை கலாச்சாரம், ஊழல், சாதி மற்றும் மத வெறி உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் ஜூலை 5 முதல் 25 ஆம் தேதி வரை 20 நாட்கள் மாநிலம் முழுவதும் ஒரு கோடி மக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் நடத்தப்பட உள்ளதாக அறிவித்தார்.
இந்த இயக்கத்தில் சேகரிக்கப்படும் கையெழுத்துகள் பின்னர் தமிழக முதலமைச்சரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முயற்சியை கடுமையாக எதிர்ப்பதாகவும், தமிழகத்தின் அனுமதியின்றி எந்த அணைத் திட்டத்திற்கும் அனுமதி வழங்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஒன்றிய அரசும் மாநில அரசும் உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநிலம் முழுவதும் இளைஞர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்தார்.
அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கல்வி நிறுவனங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை கட்டுப்படுத்த வேண்டும், ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அரசின் நிர்வாகச் செயல்பாடுகளில் தேவையற்ற தலையீடு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், கட்சித் தலைமையும் அரசும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாரதி தெரிவித்தார்.
இளைஞர்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி, சமூகநீதி, சமத்துவம் மற்றும் ஜனநாயக மதிப்புகளை முன்னிறுத்தும் தலைமுறையாக மாற்றுவதே அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.
மேலும், உறுப்பினர் சேர்க்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இந்த ஆண்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்கள் இணைவார்கள் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
Hindusthan Samachar / P YUVARAJ