Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 14 ஜூன் (ஹி.ச.)
இந்திய மாலுமிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்காவின் செயல்பாட்டை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் எம்.பி. சசி தரூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
அப்பாவி இந்திய உயிர்களின் இழப்புக்கு சிறிதளவும் வருத்தமோ, இரங்கலோ தெரிவிக்காமல் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ அறிக்கையை படிப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
நண்பரும், மூலோபாய கூட்டாளியுமான ஒரு நாடு எவ்வாறு இவ்வளவு உணர்ச்சியற்ற முறையில் நடந்து கொள்ள முடியும்?
விதிமுறைகளை பின்பற்றாத ஒரு வர்த்தகக் கப்பலை உயிரிழப்பு ஏற்படாத வகையில் தடுத்து நிறுத்துவதற்கு வேறு வழிகள் இல்லையா?
பொதுமக்களான மாலுமிகள் உயிரிழக்கும் வகையில் ஏவுகணைகளை செலுத்துவதற்கு பதிலாக, கப்பலின் உந்துவிசை அமைப்பு அல்லது திசைதிருப்பும் அமைப்பை செயலிழக்கச் செய்திருக்க முடியாதா?
இந்த முக்கியமான கடற்பாதையில் பயணிக்கும் பெரும்பாலான வர்த்தகக் கப்பல்களில் இந்திய மாலுமிகள் பணியாற்றி வருகின்றனர்.
அவர்கள் அனைவரும் இப்போது அமெரிக்க ஏவுகணைகளின் இலக்காக மாறிவிட்டார்களா என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்த கொடூரமான அணுகுமுறையை ஒருபோதும் ஏற்க முடியாது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவிடம் இந்தியாவின் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருப்பார் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
சசி தரூரின் இந்த கருத்து இந்திய அரசியல் வட்டாரங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA