சட்டவிரோத குடியேற்றத்தை கண்டறிய கள ஆய்வு - அமித்ஷா உத்தரவு
புதுடெல்லி, 14 ஜூன் (ஹி.ச.) நாட்டின் எல்லைப்புற மாவட்டங்கள், பெருநகரங்கள் மற்றும் தொழில் நகரங்களில் ஏற்பட்டு வரும் அசாதாரண மக்கள் தொகை இடப்பெயர்வு மற்றும் சட்டவிரோத குடியேற்றங்களை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. இயற்கைக்கு மாறான மக்க
A


புதுடெல்லி, 14 ஜூன் (ஹி.ச.)

நாட்டின் எல்லைப்புற மாவட்டங்கள், பெருநகரங்கள் மற்றும் தொழில் நகரங்களில் ஏற்பட்டு வரும் அசாதாரண மக்கள் தொகை இடப்பெயர்வு மற்றும் சட்டவிரோத குடியேற்றங்களை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

இயற்கைக்கு மாறான மக்கள் தொகை மாற்றங்களை அறிவியல் பூர்வமாக மதிப்பிடுவதற்காக ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பிரகாஷ் பிரபாகர் நவோலேகர் தலைமையில் உயர்மட்டக் குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் அமைத்தது. இந்தக் குழுவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் மிருதுஞ்செய்குமார் நாராயண், பொருளாதார நிபுணர் ஷாமிகா ரவி உள்ளிட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்தக் குழுவினருடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா விரிவான ஆலோசனை நடத்தினார்.

அப்போது, எல்லைப்புற பகுதிகள், பெருநகரங்கள் மற்றும் தொழில் நகரங்களுக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொள்ளுமாறு அவர் குழுவினருக்கு அறிவுறுத்தினார்.

சட்டவிரோத குடியேற்றம், எல்லை தாண்டிய நடவடிக்கைகள் மற்றும் அவற்றுக்கு காரணமான சமூக-பொருளாதார அம்சங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்து பரிந்துரைகள் வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

உயர்மட்டக் குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில், சட்டவிரோத இடப்பெயர்வைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய சட்டங்கள் மற்றும் நிர்வாகக் கொள்கைகளை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA