Enter your Email Address to subscribe to our newsletters

களியக்காவிளை, 14 ஜூன் (ஹி.ச.)
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், தமிழக எல்லைப் பகுதிகளில் சுகாதாரத் துறையினர் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக, தமிழ்நாடு - கேரளா மாநிலங்களை இணைக்கும் முக்கிய நுழைவாயிலான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் சிறப்பு மருத்துவக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி, அதில் பயணம் செய்யும் பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, தலைவலி உள்ளிட்ட நிபா வைரஸ் அறிகுறிகள் உள்ளதா என தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உடல் வெப்பநிலை பரிசோதனைக் கருவிகள் மூலம் ஒவ்வொரு பயணியும் தனித்தனியாக சோதனை செய்யப்படுகின்றனர்.
சந்தேகத்திற்குரிய அறிகுறிகள் தென்படும் நபர்கள் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் நோய் பரவாமல் தடுக்கும் நோக்கில் எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி, கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தேவையற்ற பீதி அடைய வேண்டாம் என்றும், காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையை அணுகுமாறும் சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b