Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 14 ஜூன் (ஹி.ச.)
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணைகளுக்கான நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தின் முக்கிய அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்கி வருவது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொத்தம் 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில், இன்று காலை நிலவரப்படி நீர் இருப்பு 98.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,597 கன அடி வீதம் நீர்வரத்து இருந்து வரும் நிலையில், பாசனத் தேவைக்காக 540.75 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்து தொடர்ந்தால் ஓரிரு நாட்களில் அணை 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல், 118 அடி மொத்த உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 75.35 அடியாக பதிவாகியுள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 578.79 கன அடி நீர் வந்து கொண்டிருக்க, குடிநீர் மற்றும் பாசனத் தேவைக்காக 95 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.
மாவட்டத்தின் மற்றொரு முக்கிய அணையான சேர்வலாறு அணையின் நிலவரமும் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. 156 அடி உயரம் கொண்ட இந்த அணையில் தற்போது நீர்மட்டம் 116.80 அடியாக உள்ளது. தற்சமயம் இந்த அணைக்கு நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் இல்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் பாசனப் பகுதிகளில் விவசாயப் பணிகள் சூடுபிடிக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
அதேவேளையில், அணைகளின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறையினர் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b