Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 14 ஜூன் (ஹி.ச.)
தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில் கனிம வளங்கள் அண்டை மாநிலமான கேரளத்துக்கு தொடர்ந்து கடத்தப்படுவதை தடுக்கக்கோரி பொதுமக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
புளியரை வழியாக கேரளத்துக்கு கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
தொடர் வாகன போக்குவரத்தால் சாலைகள் சேதமடைவதோடு, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
கனிம வளங்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதால் இப்பகுதியின் இயற்கை வளம் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் போராட்டக்காரர்கள் வேதனை தெரிவித்தனர்.
எனவே, மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உடனடியாக தலையிட்டு கனிமவள கடத்தலை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சாலை மறியல் போராட்டத்தால் தென்காசி-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
Hindusthan Samachar / vidya.b