Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 14 ஜூன் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்
கார்த்திக் (43). இவர் கடந்த ஒன்பது ஆண்டுகளாக பள்ளப்பட்டி அருகே திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலையில் உள்ள டிராக்டர் தயாரிக்கும் தனியார் கம்பெனியில் எஸ்எம்எஸ் என்ற தனியார் ஏஜென்சியில் லோடுமேனாக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிறுவனத்தில் வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 5-முதல் 7-ம் தேதிக்குள் சம்பளம் வழங்கி வந்ததாக தெரிகிறது. ஆனால் இந்த மாதம் 13-ம் தேதி ஆகியும் சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது, இதுகுறித்து நிர்வாகத்திடம் கேட்டபோதும் உரிய பதிலளிக்காததால் இரவு வேலைக்கு வந்த கார்த்திக் சம்பளம் குறித்து கேட்டுள்ளார்
அப்போது தனியார் ஒப்பந்த நிறுவன அலுவலர்கள் கார்த்திக்கை தரக்குறைவாக பேசியதுடன் வேலையைவிட்டு நிறுத்திவிடுவதாக எச்சரித்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனையடைந்த கார்த்திக் டிராக்டர் தயாரிக்கும் நிறுவனத்தின் பிரதான வாசல் முன்பு வந்து தனது உடம்பில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதனால் அவர்மீது தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயை அணைத்து அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.
இதில் 40-சதவீதம் தீக்காயம் ஏற்பட்ட நிலையில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN