Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 14 ஜூன் (ஹி.ச.)
சேலம் மாநகரில் பெண்களை ஏமாற்றி பாலியல் வணிகத்தில் ஈடுபடுத்தியதாகக் கூறப்படும் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி, குற்றத்தின் முழு பின்னணியையும் வெளிக்கொணர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சேலம் மாநகரின் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (40) என்பவர், வறுமை நிலையில் உள்ள பெண்களுக்கு கடன் வழங்குவதாகக் கூறி ஏமாற்றி பாலியல் வணிகத்தில் ஈடுபடுத்தியதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கின் விசாரணையில் இதுவரை 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாகக் கூறியுள்ள அவர், கைது செய்யப்பட்டுள்ள மணிகண்டனின் அரசியல் பின்னணி குறித்தும் தீவிரமாக விசாரித்து அதன் விவரங்களை பொதுமக்கள் அறியச் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த வழக்கில் மணிகண்டன் மட்டுமே குற்றவாளி என விசாரணையை குறுகிய எல்லைக்குள் நடத்தாமல், அவருக்கு பின்னால் இருந்து செயல்பட்டவர்கள் யார், இந்த குற்றச் செயலுக்கு துணைநின்றவர்கள் யார் என்பதையும் கண்டறிய விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக இத்தகைய குற்றச்செயல்கள் நடைபெற்று வந்த நிலையில், அவை காவல்துறையின் கவனத்துக்கு வராமல் இருந்திருக்க முடியாது என்ற சந்தேகம் எழுவதாகவும், எனவே விசாரணை வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடைபெற இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசால் உருவாக்கப்பட்டுள்ள “சிங்கப்பெண் சிறப்புப் படை”யின் பணிகளை மேலும் விரிவுபடுத்தி, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam