மின்வெட்டு பிரச்சினையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை தேவை - முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வலியுறுத்தல்
கரூர், 14 ஜூன் (ஹி.ச.) தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு பிரச்சினையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், அதைத் தீர்க்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி வலியுறுத்திய
செந்தில்


கரூர், 14 ஜூன் (ஹி.ச.)

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு பிரச்சினையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், அதைத் தீர்க்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் 6 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை மின்வெட்டு நிலவுவதாகவும், இதனால் பொதுமக்கள் நள்ளிரவிலும் சாலைகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மின்வெட்டுக்கான காரணங்களை விளக்குவதற்குப் பதிலாக, மின்துறை அமைச்சர் பல்வேறு காரணங்களை கூறி திசைதிருப்ப முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ள அவர், ஃபியூஸ் கேரியர் திருட்டு, ஹார்ட் டிஸ்க் மாயம், மின்வாரிய ஊழியர்கள் சதி போன்ற விளக்கங்கள் மக்களை ஏமாற்றும் முயற்சியே என விமர்சித்துள்ளார்.

தமிழகத்தின் மின் தேவை ஆண்டுதோறும் அதிகரித்த போதிலும், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டதாகவும், 2021 முதல் 2026 வரை மின் தேவை 16,481 மெகாவாட்டில் இருந்து 20,974 மெகாவாட்டாக உயர்ந்த நிலையிலும் நிர்வாக திறமையால் மின்வெட்டு தவிர்க்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டதுடன், புதிய மின்மாற்றிகள், துணை மின் நிலையங்கள் மற்றும் மின் உற்பத்தித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, சமூக வலைதள விளம்பரங்களில் கவனம் செலுத்துவதை விட, மின்வெட்டு பிரச்சினையைத் தீர்த்து பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகளின் துயரைப் போக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செந்தில்பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P