குற்றவாளியுடன் தொடர்பு, பணம் பெற்றதாக புகார் - மணிமங்கலம் காவல் நிலைய இரு காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்
செங்கல்பட்டு, 14 ஜூன் (ஹி.ச.) தாம்பரம் அருகே உள்ள மணிமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ரைட்டர் கோபி மற்றும் சிறப்பு பிரிவு காவலர் மகேஷ் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி தாம்பரம் மாநகர காவல் ஆணையர் சஞ்சய் குமார் ஐபிஎஸ் அதிரடி நடவடிக்கை எ
ஆயுதப்படை


செங்கல்பட்டு, 14 ஜூன் (ஹி.ச.)

தாம்பரம் அருகே உள்ள மணிமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ரைட்டர் கோபி மற்றும் சிறப்பு பிரிவு காவலர் மகேஷ் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி தாம்பரம் மாநகர காவல் ஆணையர் சஞ்சய் குமார் ஐபிஎஸ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

மணிமங்கலம் காவல் நிலையத்தில் ரைட்டராக பணிபுரிந்து வந்த கோபி மீது நீண்ட நாட்களாக பல்வேறு புகார்கள் உயரதிகாரிகளுக்கு சென்றதாக கூறப்படுகிறது. காவல் நிலையத்திற்கு வரும் புகார்தாரர்களிடம் தரக்குறைவாக நடந்து கொள்வது, ஒருதலைப்பட்சமாக விசாரணை நடத்துவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அவரது செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், முக்கிய குற்றவாளி ஒருவருடன் ரைட்டர் கோபி தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்ததுடன், தொலைபேசியில் அடிக்கடி பேசியதாகவும், அவரிடமிருந்து பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. மேலும், தனது மீது உயரதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறி அச்சுறுத்தி, பலமுறை பணம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதேபோல், ரைட்டர் கோபி கூறிய இடங்களுக்கு சென்று பணத்தை பெற்றதில் சிறப்பு பிரிவு காவலர் மகேஷுக்கும் தொடர்பு இருப்பதாகவும், இதுதொடர்பான ஆதாரங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புகார்கள் ஆதாரங்களுடன் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் சஞ்சய் குமார் கவனத்திற்கு சென்றதைத் தொடர்ந்து, தாம்பரம் துணை காவல் ஆணையர் கார்த்திகேயன் வாக்கி-டாக்கி மூலம் உடனடியாக இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்ற உத்தரவிட்டார்.

மேலும், சம்பவத்தை தடுக்கத் தவறியதாகக் கூறப்படும் காவல் ஆய்வாளர் நெடுமாறனையும் உயரதிகாரிகள் கடுமையாக எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

குற்றவாளியுடன் தொடர்பில் இருந்ததோடு, பணம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இரு காவலர்கள் மீது எடுக்கப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கை, தாம்பரம் மாநகர காவல்துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam