திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் வெள்ளம் - 6 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்
தூத்துக்குடி, 14 ஜூன் (ஹி.ச.) விடுமுறை தினம் மற்றும்ம்கிருத்திகை நட்சத்திரம் ஒரே நாளில் அமைந்ததால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் சுமார் ஆறு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாம
திருச்செந்தூர்


தூத்துக்குடி, 14 ஜூன் (ஹி.ச.)

விடுமுறை தினம் மற்றும்ம்கிருத்திகை நட்சத்திரம் ஒரே நாளில் அமைந்ததால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் சுமார் ஆறு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், முருக பக்தர்களின் முக்கிய வழிபாட்டு தலமாகவும் சிறந்த பரிகார ஸ்தலமாகவும் திகழ்கிறது. இதனால் திருவிழா நாட்கள் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.

இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் மற்றும் முருகப்பெருமானுக்கு உகந்த கிருத்திகை நட்சத்திரம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் திரளாக வந்தனர்.

பக்தர்கள் கடலில் நீராடிய பின்னர் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். முடி காணிக்கை செலுத்தவும், நாழிக்கிணற்றில் நீராடவும் தனித்தனி நீண்ட வரிசைகள் காணப்பட்டன.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கோவில் வளாகம் முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக திருச்செந்தூர் நகரின் முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

மேலும், கோவிலில் போதிய வாகன நிறுத்துமிட வசதி இல்லாததால், பக்தர்கள் தங்களது வாகனங்களை புறநகர் பகுதிகளில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பலர் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து கோவிலை அடைய வேண்டிய அவல நிலை ஏற்பட்டதாக பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.

திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நிரந்தர மற்றும் விரிவான வாகன நிறுத்துமிட வசதிகளை விரைவாக ஏற்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam