Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 14 ஜூன் (ஹி.ச.)
மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும், பள்ளிகளுக்கு அருகிலுள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற நடவடிக்கை தொடரும் என்றும் தெரிவித்தார்.
ஆய்வின் போது மாற்றுத்திறனாளியான ஸ்ரீகாந்த் என்பவர் அமைச்சரை நேரில் சந்தித்து, திமுக ஆட்சியில் தனக்கு வேலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் இதுவரை பணிநியமனம் கிடைக்கவில்லை என்று முறையிட்டார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், அரசு பணி கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததுடன், என்னுடைய ஆசீர்வாதம் தேவையில்லை,பெற்றோரின் ஆசீர்வாதமே முக்கியம் என்று அறிவுரை வழங்கினார்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர்,
தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறினார்.
போதைப்பழக்கம் அனைத்து குற்றங்களுக்கும் தாய்மடியாக உள்ளது.
இதுவரை 1,638 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதையில்லா தமிழ்நாடு என்பதே எங்களது இலக்கு என்றார்.
ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள் காலிப்பணியிடங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,
சில பிரச்சினைகள் நீதிமன்றத்தில் உள்ளன; சிலவற்றை பேசி தீர்க்க வேண்டியுள்ளது. போர்கள் கூட பேசி முடிக்கப்படும்போது, பள்ளிக்கூட பிரச்சினைகளை முடிக்க முடியாதா? காலிப்பணியிடங்களை எவ்வளவு விரைவாக முடியும் அவ்வளவு விரைவாக நிரப்புவோம் என்றார்.
பள்ளிகளுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகள் தொடர்பாக, 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதற்கான முக்கிய காரணம் அவை பள்ளிகளுக்கு அருகில் இருந்தது தான்.
மாணவர்கள் பள்ளி செல்லும் வழியில் என்ன பார்க்கிறார்களோ அதுவே அவர்களின் மனநிலையை பாதிக்கும்.
எனவே கல்வி நிலையங்களுக்கு அருகில் உள்ள மதுபானக் கடைகள் தொடர்ந்து அகற்றப்படும் என்று தெரிவித்தார்.
மாணவர்களிடையே அதிகரித்து வரும் மனநல மற்றும் சமூக சவால்களை எதிர்கொள்ள, மனநல ஆலோசகர்கள் மற்றும் மருத்துவர்களுடன் கூடிய நடமாடும் சேவைகள் விரிவுபடுத்தப்படும் என்றும், தன்னம்பிக்கை மற்றும் உடற்பயிற்சி வகுப்புகள் மேலும் அதிகரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த அமைச்சர்,
அரசியல் தெரிந்த அளவுக்கு அறிவியலும் தெரிந்திருக்க வேண்டும். காலநிலை மாற்றம், மழைப்பொழிவு குறைவு போன்றவை அறிவியல் சார்ந்த உண்மைகள் என்று விமர்சித்தார்.
ஆதவ் அர்ஜூனாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு,
எங்களுடைய தலைமை மக்கள் மட்டும்தான்.
ஆதவ் அர்ஜூனா ஆற்றல்மிக்க அமைச்சர்,அவரது பணியால் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று பாராட்டினார்.
பள்ளிகளில் மத அடையாளங்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,
சாதி அடையாளங்களை தூண்டிவிடும் முயற்சிகளை அனுமதிக்க முடியாது.
ஆனால் ஏற்கனவே இருந்த நடைமுறைகள் தொடரும். நானே குங்குமம், விபூதி வைத்துதான் பள்ளிக்குச் சென்றவன் என்று விளக்கம் அளித்தார்.
மேலும், மதுரை காந்தி அருங்காட்சியகத்தின் புனரமைப்பு பணிகளில் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், மீதமுள்ள பணிகள் சில மாதங்களில் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam