ஆழ்துளை கிணறு அமைக்கும் பிரச்சினை - பெண்ணை தாக்கியதாக தவெக நிர்வாகி மீது குற்றச்சாட்டு
சேலம், 14 ஜூன் (ஹி.ச.) சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஆழ்துளை கிணறு அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தவெக நிர்வாகி ஒருவர் பெண்ணை தாக்கியதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓமலூர் அருகேயுள்ள அமரகுந்தி பகுதிய
ஆழ்துளை கிணறு


சேலம், 14 ஜூன் (ஹி.ச.)

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஆழ்துளை கிணறு அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தவெக நிர்வாகி ஒருவர் பெண்ணை தாக்கியதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓமலூர் அருகேயுள்ள அமரகுந்தி பகுதியை சேர்ந்த பரந்தாமனின் மகன் முத்தண்ணன், தவெக நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். அதே பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது ஆழ்துளை கிணறு தோண்டும் பணியின் போது வெளியேறிய புகை மற்றும் தூசி தங்களது வீட்டுப் பகுதிக்கு வருவதாகக் கூறி முத்தண்ணன், விவசாயி குடும்பத்தினரிடம் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் இருதரப்பினரும் மோதிக்கொண்டதாகவும், அப்போது விவசாயியின் மனைவி வசந்தாவை முத்தண்ணன் தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மோதலில் காயமடைந்த இருதரப்பினரும் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்த தொளசம்பட்டி போலீசார், இருதரப்பினரின் புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, சம்பவம் அந்தப் பகுதியில் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

போலீசார் வீடியோ காட்சிகளையும் ஆய்வு செய்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam