வைகாசி அமாவாசை- ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் திரள்
ராமேஸ்வரம், 14 ஜூன் (ஹி.ச.) வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் குவிந்து புனித நீராடி, முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு மேற்கொண்டனர். புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு நாள்
அக்னி தீர்த்த கடற்கரை


ராமேஸ்வரம், 14 ஜூன் (ஹி.ச.)

வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் குவிந்து புனித நீராடி, முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு மேற்கொண்டனர்.

புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.

அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இன்று வைகாசி மாத அமாவாசையை ஒட்டி அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் திரண்டனர்.

அங்கு புனித நீராடிய பக்தர்கள், தங்களுடன் வாழ்ந்த மறைந்த முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் வைத்து திதி மற்றும் தர்ப்பண வழிபாடுகளை செய்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பக்தர்கள், சுவாமி மற்றும் அம்பாளை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

பக்தர்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில், கோயில் வளாகம் மற்றும் அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க ராமநாதசுவாமி கோயிலைச் சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வைகாசி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் கோயில் மற்றும் கடற்கரை பகுதிகளில் ஆன்மிகச் சூழல் நிலவியது.

Hindusthan Samachar / GOKILA arumugam