தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா தமாகா? - ஜி.கே.வாசன் சூசகம்
சென்னை, 14 ஜூன் (ஹி.ச.) சென்னை எழும்பூரில் நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பேசிய ஜி.கே.வாசன், கட்சி தொடங்கி 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், சட்டமன்றம், நாடாளுமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றி பெற முடியாத சூழல்
வாசன்


சென்னை, 14 ஜூன் (ஹி.ச.)

சென்னை எழும்பூரில் நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பேசிய ஜி.கே.வாசன்,

கட்சி தொடங்கி 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், சட்டமன்றம், நாடாளுமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றி பெற முடியாத சூழல் நீடித்து வருவதாகக் கூறினார்.

தொடர்ந்து இடம்பெற்ற கூட்டணிகளின் மூலம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை என்பதும் உண்மை நிலை என அவர் தெரிவித்தார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தமிழக அரசியலில் வித்தியாசமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், திமுக - அதிமுக மாறி மாறி ஆட்சி அமைக்கும் அரசியல் சூழலுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், பல கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் மனமாற்றத்தை உருவாக்கிய தேர்தலாக இது அமைந்துள்ளதாகவும் கூறினார்.

தேர்தல் முடிந்து 40 நாட்கள் கடந்த பின்னரும் மாநில அரசியலில் சந்தர்ப்பவாத அணுகுமுறைகள் தொடர்வதாகவும், தேர்தலின்போது கூட்டணியில் இருந்த கட்சிகள் பின்னர் தனித்த பாதையில் செல்வதைப் பார்க்க முடிவதாகவும் அவர் விமர்சித்தார்.

தமிழ் மாநில காங்கிரஸ், காமராஜரின் நேர்மை மற்றும் எளிமை வழியில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகத் தெரிவித்த ஜி.கே. வாசன், காங்கிரஸ் கட்சியைவிட தமாகா அமைப்பு ரீதியாக ஒற்றுமையுடன் இருப்பதாகக் கூறினார். இது காங்கிரஸை விமர்சிப்பதற்காக அல்ல என்றும், கடந்த 12 ஆண்டுகளாக கண்ணியமாக அரசியல் பயணம் மேற்கொண்டு வரும் கட்சியாக தமாகா திகழ்கிறது என்றும் குறிப்பிட்டார்.

மேலும், வருங்கால அரசியல் பயணம், கட்சியின் கட்டமைப்பு மற்றும் கூட்டணி தொடர்பான முடிவுகளை தீர்மானிக்கும் முக்கியமான கூட்டமாக இந்த செயற்குழு கூட்டம் அமைந்துள்ளதாகவும், வெற்றிக்காக ஆரோக்கியமான மற்றும் வலுவான கூட்டணி தேவை என்றும் ஜி.கே. வாசன் வலியுறுத்தினார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P