பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளிலிருந்து நாளை முதல் பாசனத்துக்காக நீர் திறப்பு
திருநெல்வேலி, 14 ஜூன் (ஹி.ச.) திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய நீராதாரங்களான பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து நாளை முதல் பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. வரும் அக்டோபர் 13-ம்
பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளிலிருந்து நாளை முதல் பாசனத்துக்காக நீர் திறப்பு


திருநெல்வேலி, 14 ஜூன் (ஹி.ச.)

திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய நீராதாரங்களான பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து நாளை முதல் பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

வரும் அக்டோபர் 13-ம் தேதி வரை தொடர்ந்து 121 நாட்களுக்கு இந்த நீர் திறப்பு நடைபெறும் என நீர்வளத்துறை செயலர் தெரிவித்துள்ளார்.

தேவைக்கேற்ப மொத்தம் 6,086.83 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நீர் திறப்பின் மூலம் நெல்லை மாவட்டத்தில் உள்ள கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய் உள்ளிட்ட 9 முக்கிய கால்வாய்களின் கீழ் அமைந்துள்ள நேரடி மற்றும் மறைமுக பாசன பரப்புகளுக்கு நீர் கிடைக்கும்.

கார் பருவ சாகுபடியை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் இந்த நீர் திறப்பால் சுமார் 36,521 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என்றும், இதனால் விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள் என்றும் நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் திருப்திகரமாக உள்ள நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பாசன நீரை சிக்கனமாகவும், முறையாகவும் பயன்படுத்தி அதிக மகசூல் பெறுமாறு விவசாயிகளுக்கு நீர்வளத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b