Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பதி, 14 ஜூன் (ஹி.ச.)
திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில் வளாகத்தில் ஆந்திர மாநில துணை முதலமைச்சரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணின் சுயசரிதை புத்தகத்துடன் ரீல்ஸ் வீடியோ எடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
'பவன் கல்யாண் என்னும் நான்' என்ற பெயரில் வெளியான சுயசரிதை புத்தகத்தை கையில் ஏந்தியபடி ஜனசேனா கட்சியைச் சேர்ந்த சில தொண்டர்கள் திருமலை திருக்கோயிலின் முன்பு ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் அரசியல் சார்ந்த எந்த நிகழ்ச்சிகளையும், பிரச்சாரங்களையும் நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடுமையான தடை விதித்துள்ளது. கோயிலின் புனிதத்தன்மையையும் ஆன்மிக சூழலையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த விதிமுறை கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோயில் விதிகளை மீறி அரசியல் தலைவரின் சுயசரிதையுடன் வீடியோ எடுத்த ஜனசேனா தொண்டர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வலுத்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் கண்டு உரிய விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திருமலையில் செல்போன் பயன்பாட்டுக்கு ஏற்கனவே கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், முக்கிய பகுதிகளில் ரீல்ஸ் எடுப்பது, அரசியல் நோக்கில் கோயிலை பயன்படுத்துவது போன்ற செயல்கள் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக தேவஸ்தானம் விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b