Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 14 ஜூன் (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம் தின்னூர் கிராமத்தை அடுத்த வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் நேற்று இரவு உணவு தேடி வந்த காட்டு யானை தாக்கியதில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் படுகாயமடைந்தார்.
காயமடைந்த முதியவர் உடனடியாக மீட்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த மகாராஜாகடை குப்பம் கிராம மக்கள், தொடர்ந்து ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைக் கூட்டங்களை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வலியுறுத்தி இன்று காலை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கிருஷ்ணகிரி - தின்னூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
கடந்த சில மாதங்களாகவே இப்பகுதியில் யானைகள் ஊடுருவல் அதிகரித்துள்ளதால் விவசாயிகளும் பொதுமக்களும் அச்சத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b