பட்டீஸ்வரத்தில் ஆனி முதல் நாள் முத்துப்பந்தல் திருவிழா - 3 டன் எடை கொண்ட பிரமாண்ட முத்துப்பல்லாக்கில் திருஞானசம்பந்தர் பவனி
தஞ்சாவூர், 15 ஜூன் (ஹி.ச.) தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் ஞானாம்பிகை சமேத தேனுபுரீஸ்வரர் திருக்கோயிலில் ஆனி மாத முதல் நாளை முன்னிட்டு நடைபெற்ற பாரம்பரிய முத்துப்பந்தல் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவிழாவின் முக்கி
திருஞானசம்பந்தர்


தஞ்சாவூர், 15 ஜூன் (ஹி.ச.)

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் ஞானாம்பிகை சமேத தேனுபுரீஸ்வரர் திருக்கோயிலில் ஆனி மாத முதல் நாளை முன்னிட்டு நடைபெற்ற பாரம்பரிய முத்துப்பந்தல் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, 36 அடி நீளமும், 24 அடி உயரமும், 3 டன் எடையும் கொண்ட பிரமாண்ட முத்துப்பல்லாக்கில் சிறப்பு மலர் அலங்காரத்துடன் திருஞானசம்பந்தர் எழுந்தருளினார்.

நாதஸ்வர, மேளதாள மங்கள இசைகள் முழங்க, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்கள் தோள்களில் முத்துப்பல்லாக்கை சுமந்து முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தனர்.

பட்டீஸ்வரம் தலம், திருஞானசம்பந்தருக்காக இறைவன் முத்துப்பந்தல் அமைக்கச் செய்ததும், அவரைக் காண நந்தியம்பெருமானை சற்று விலகி நிற்கக் கட்டளையிட்டதும் எனும் புராண சிறப்பைக் கொண்டதாகும். இதன் அடையாளமாக இன்றும் இத்தலத்தில் நந்தி, மூலவருக்கு நேராக இல்லாமல் சற்று விலகியே அமைந்துள்ளது.

புராண வரலாற்றின்படி, கடும் வெயிலில் பட்டீஸ்வரத்திற்கு வந்த திருஞானசம்பந்தரின் பக்தியை கண்டு தேனுபுரீஸ்வரர் தனது பூதகணங்களை அனுப்பி முத்துப்பந்தல் அமைத்து அவரை அழைத்து வரச் செய்ததாக கூறப்படுகிறது.

அந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஆனி மாத முதல் நாளில் முத்துப்பந்தல் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

இன்று நடைபெற்ற விழாவில், பட்டீஸ்வரம் திருமடாலயத்தில் இருந்து திருமேற்றழிகை கைலாசநாதசுவாமி கோயில், பின்னர் திருசக்திமுற்றம் சக்திவனேஸ்வரர் கோயில் வழியாக திருஞானசம்பந்தர் முத்துப்பல்லாக்கில் பவனி வந்து தேனுபுரீஸ்வரரை தரிசித்தார்.

மக்கள் வெள்ளத்தில் கப்பல் மிதந்து வருவது போல் தோற்றமளித்த பிரமாண்ட முத்துப்பல்லாக்கு பவனி, பக்தர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.

விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு திருஞானசம்பந்தரை தரிசித்து வழிபட்டனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam