Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஜூன் (ஹி.ச.)
சென்னை அம்பத்தூர் ஒரகடம் ஏரிக்கரை பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் நடைபெற்றது. ரிஷி என்ற இளைஞர் மீது 12 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
பலத்த காயமடைந்த ரிஷியை ரத்த வெள்ளத்தில் புதரில் வீசிவிட்டு கும்பல் தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ரிஷியை மீட்டு போர்வையில் தூக்கி வந்து ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பாக அம்பத்தூர் காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து தலைமறைவாக இருந்த கோகுல், இளவரசன், தனரத்தினம், சஞ்சய் குமார், உதயசூரியன், கிருஷ்ணா, எழிலரசன், ஈஸ்வர் கிரி, விஜய், அன்பு, ரமேஷ் மற்றும் கணேஷ் ஆகிய 12 பேரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் எழிலரசன், விஜய், அன்பு ஆகிய மூவர் சிறுவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறே தாக்குதலுக்கான காரணமா அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam