உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை, 15 ஜூன் (ஹி.ச.) தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட போட்டித் தேர்வின் முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும், மேலும் 1292 பணியிடங்களுக்கு புதிய ஆட்சேர்ப்பு அற
அன்புமணி


சென்னை, 15 ஜூன் (ஹி.ச.)

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட போட்டித் தேர்வின் முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும், மேலும் 1292 பணியிடங்களுக்கு புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, டிசம்பர் 27-ஆம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

42,064 பேர் விண்ணப்பித்த இந்தத் தேர்வின் முடிவுகள் ஆறு மாதங்கள் கடந்தும் முழுமையாக வெளியிடப்படாதது ஏமாற்றமளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

61 துறைகளில் நடத்தப்பட்ட தேர்வுகளில் இதுவரை 5 துறைகளுக்கான முடிவுகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. அவற்றிலும் வெறும் 5 பேருக்கு மட்டுமே பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், புதிய உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படாததால் மாணவர்களுக்கு போதிய ஆசிரியர்கள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும், மாநிலம் முழுவதும் 8,000-க்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், மீதமுள்ள 2705 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை இம்மாத இறுதிக்குள் வெளியிட அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி கூடுதலாக 1292 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பையும் ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P