Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 15 ஜூன் (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பெண் குழந்தை பாலியல் தாக்குதலுக்குள்ளாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் தொடர்புடைய வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதையும், காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூரில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மற்றொரு வடமாநில நபர் கைது செய்யப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் குற்றச் சம்பவங்களில் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்புடையதாக செய்திகள் வெளியாகி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, சென்னையில் சங்கிலி பறிப்பு முயற்சி, தாம்பரம் அருகே பாலியல் தொல்லை, திருவள்ளூர் பகுதியில் பெண்ணிடம் அத்துமீறல், வேளச்சேரி மற்றும் மதுரவாயல் பகுதிகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட பல வழக்குகளில் வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருப்பது கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளை விரைவாகக் கண்டறிந்து கைது செய்யும் காவல்துறையின் நடவடிக்கையை பாராட்டியுள்ள அவர், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழக அரசு என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
மேலும், வேலைவாய்ப்புக்காக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழகத்திற்கு வருவது இயல்பானது என்றாலும், பிற மாநிலங்களிலிருந்து வருபவர்களின் முழுமையான விவரங்கள் அவர்களை பணியமர்த்தும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் நிறுவனங்களிடம் உள்ளதா, அந்த விவரங்கள் அரசிடம் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக கூறியுள்ளார்.
தமிழகத்தில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை, சொந்த ஊர், பணியிடம், தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பணியமர்த்தும் நிறுவனங்கள் அரசிடம் கட்டாயமாக வழங்க வேண்டும் என்றும், அவற்றை அரசு தொடர்ந்து கண்காணிக்கும் நடைமுறையை ஏற்படுத்த வேண்டும் என்றும் அண்ணாமலை தனது எக்ஸ் தளப் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ