Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஜூன் (ஹி.ச.)
இந்தியாவின் இரண்டாவது உயரிய அமைதிக்கால வீர விருதான கீர்த்தி சக்ரா விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் அ. மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.48 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கி கவுரவித்தார்.
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் வெளிப்படுத்திய அசாதாரண வீரத்தையும் தன்னலமற்ற சேவையையும் பாராட்டி இந்தப் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லான்ஸ் நாயக் அ. மீனாட்சி சுந்தரம், இந்திய இராணுவத்தின் பீரங்கிப் படைப்பிரிவில் பணியாற்றி வருகிறார்.
கடந்த 19 டிசம்பர் 2024 அன்று ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது, பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் முகம் மற்றும் தோள்பட்டையில் பலத்த காயமடைந்த நிலையிலும் தனது கடமையை விடாமல் தொடர்ந்து போராடி பயங்கரவாதிகளை வீழ்த்தினார்.
அவரது வீரத் தீரச் செயலைப் பாராட்டி, இந்தியாவின் இரண்டாவது உயரிய அமைதிக்கால வீர விருதான கீர்த்தி சக்ரா விருதை இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த 8 ஜூன் 2026 அன்று புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் வழங்கி கவுரவித்தார்.
தேசத்தின் பாதுகாப்பிற்காக உயிரைப் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அ. மீனாட்சி சுந்தரத்தின் நாட்டுப்பற்று, துணிச்சல் மற்றும் கடமை உணர்வு தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்ப்பதோடு, இளம் தலைமுறையினரிடையே வீர உணர்வையும் தியாக மனப்பான்மையையும் வளர்க்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ